அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நேற்று(16) ஆறு பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் – பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வீச்சுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளார்.
பின்னர் அவரை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்னால் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை குழுவினருக்கு இடையில் நேற்று(16) கூட்டமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் இதன்போது கூறியுள்ளார்.
வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்ய யாழ்ப்பாணம் முழுவதும் பொலிசாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு தொடர் கண்காணிப்புக்கள் இடம்பெறுவதாகவும், சில சந்தேகத்துக்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்தே, நீதிபதி இளஞ்செழியன் வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.