யூனுஸ்கானின் ஓய்வு எப்போது

பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் யூனிஸ் கான், 37. கொழும்புவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட், இவரது 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 5வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக மியான்தத், இன்சமாம், வாசிம் அக்ரம், சலிம் மாலிக் ஆகியோர் 100 அல்லது அதற்கு மேல் டெஸ்டில் விளையாடினர்.

இதுகுறித்து யூனிஸ் கான் கூறியது: டெஸ்ட் அரங்கில் 100வது போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி. பாகிஸ்தான் அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.
தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. விடை பெற விரும்பினால் அதனை நானே முறையாக அறிவிப்பேன். மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளேன்.

கிரிக்கெட் போட்டியை மிகவும் நேசிக்கும் நான், தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்து வருகிறேன். சீனியர் வீரர் மியான்தத்திடம் இருந்து தான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இவரது பங்களிப்பு முக்கியமானது. கிரிக்கெட் அரங்கில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன். என் மீதும், கடவுள் மீதும் எப்போதுமே நம்பிக்கை உள்ளது.

ஒரு விளையாட்டு வீரரின் முன்னேற்றத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு முக்கிய பங்கு வகிக்கும். சொந்த மண்ணில் விளையாடும் போது கூடுதல் உற்சாகம் கிடைக்கும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்படுவது ‘ஸ்பெஷல்’ தான். கடந்த 2009ல் கராச்சியில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ‘டிரிபிள் செஞ்சுரி’ அடித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். என யூனிஸ் கான் கூறினார்.