யோகாவை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை, பாகிஸ்தானுக்கு செல்லலாம்

யோகாவை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வசிக்க உரிமையில்லை என்று வி.எச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி கூறி இருப்பது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி, யோகாவை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வசிக்க உரிமையில்லை என்று மேலும் ஒரு அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இது, தற்போது அனலைக் கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாத்வி பிராச்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்தியாவின் கலாசார, பாரம்பரியக் கலைகளில் ஒன்றான யோகாசனத்தை முஸ்லிம்கள் தாங்களாகவே முன்வந்து தெரிந்துகொள்ள வேண்டும். இதில், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

யோகாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் இந்தியாவின் உணவை சாப்பிட்டுவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என ஜனநாயகம் உங்களுக்கு (முஸ்லிம்) சொல்லிக் கொடுக்கவில்லை.

முதல் சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு, அதுவொன்றும் அரசியல் தலைவருடைய மகளின் திருமணம் அல்ல. யோகாசன நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை” என்றார்.