(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பான சம்பவம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் தன்னை விமர்சித்திருந்தாலும் தற்போது அவர்கள் தன்னுடன் நன்றாக பேசுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குரல் பதிவுகள் காரணமாக மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என பலர் நினைத்தாலும் இந்த சம்பவத்தின் பின்னர் தனது பிரபலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட எண்ணியிருந்த போதிலும் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்க சஜித் பிரேமதாச விருப்பம் வெளியிட்டுள்ளதால், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தில் ரஞ்சன் ராமநாயக்க கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




















