ரணிலிடம் அரசியலில் சேறு பூசும் விளையாட்டு இல்லை – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் அவர் இக்கருத்தினை முன்வைத்துள்ளர்.

மேலும் அவர் கூறுகையில்;

”ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடக் கூடியவரல்ல. என்னிடம் பல்வேறு வழிகளில் உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் கூட இன்று எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர், எனினும் ரணில் அவ்வாறு செய்யவில்லை.

சேறு பூசுவதிலும் ஒர் எல்லையிருக்க வேண்டும். ஒட்டுமொத்த குடும்பத்திற்கு எதிராகவும் சேறு பூசப்படுகின்றது. நான் இன்று மாத்தறைக்கு செல்ல வேண்டுமென்றாலும் ஒரு சிலரிடம் கேட்க வேண்டியுள்ளது.

மாத்தறைக்கு செல்ல எவரின அனுமதியும் தேவையில்லை, இதற்கு முன்னரும் நான் மாத்தறை சென்றிருக்கின்றேன். இன்று ஊடகங்கள் கேலிச்சித்திரங்களுக்கு என்னைப் பயன்படுத்துகின்றன. அவற்றை பார்த்து நான் சந்தோசமடைகின்றேன்.

ஊடகங்கள் என்னுடன் எப்போதும் சுமுகமான உறவினைப் பேணி வருகின்றன, சமநிலையாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனக்கு ஆச்சரியம், என்னிடம் அதிகளவு உதவி பெற்றுக் கொண்டவர்களே இன்று எனக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்களின் கோவைகள் இன்னமும் என்னிடம் இருக்கின்றன. எனது வீட்டில் இளநீர் பறித்தவர்களும் எனக்கு துரோகம் செய்கின்றார்கள். அவற்றுக்கு நான் கோபப்படப் போவதில்லை.

அண்மையில் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றில் கெட்ட வார்த்தை பிரயோகித்தமை திடீர் ஆத்திரம் காரணமாகவாகும். ரணில் அவரை எழும்பச் சொல்லியும் அமரச் சொல்லியும் உத்தரவு பிறப்பித்தார். அதனால் வாசுவதேவ கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார்” என மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.