(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள 14 முக்கிய நபர்களை அடையாளம் கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை இனங்கண்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் தலைமையகம் இந்த 14 பேரின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளில் இருந்து முக்கிய நபர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கொழும்பு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்களை ஆக்கிரமித்ததோடு அவ்வெல்லை சில சிலர் இரவோடு இரவாக ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தை தாக்கி சேதப்படுத்தினர்.
ஜனாதிபதியின் இல்லத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த நூலகம், மற்றும் ஓவியங்கள் என்பன அழிக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718594950, 0718594929, 0112422176 என்ற இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் ஊடாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
