ரத்துபஸ்வல குடிநீர் குறித்த அறிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில்

கம்பஹா, ரத்துபஸ்வெல பிரதேசத்தில் குடிநீர் சுகாதாரமற்றது என்று கூறி மக்கள் கடந்த கால ஆட்சியின் போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவரும் பலியாகியிருந்தார்.

இந்நிலையில் இந்த பிரதேச குடிநீரை பரிசோதித்த மத்திய சுற்றாடல் அதிகாரிகள் இது தொடர்பான அறிக்கையை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் பிரதேச குடிநீரை பரிசீலித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி நீர் பாதுகாப்பு அமைப்பினால் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று (8) எடுத்துக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது, இந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீரின் மூலகங்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் அடிப்படையை ஒத்திருக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகாரிகள் வழங்கிய அறிக்கையில் உள்ளதாக மனுதாரர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்கு மீதான மீள்விசாரணை மீண்டும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.