ரவிராஜ் கொலை வழக்கு – சிறப்பு ஜுரிகள் சபை முன்பாக 22ம் திகதி முதல் விசாரணை..

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு சிங்களம் பேசும் சிறப்பு ஜுரிகள் முன்பாக எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதியை ஏலவே வழங்கியிருந்த கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(31) திகதியையும் அறிவித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இதனை அறிவித்தார்.

ஏற்கனவே ரவிராஜ் படுகொலை விவகாரத்தை விசாரணை செய்ய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் நேற்று வழக்கானது அதுதொடர்பிலான விடயங்களை அறிவிப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இந்த வழக்கை சிறப்பு ஜுரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதவான் அன்றைய தினம் அனைத்து சாட்சியாளர்களையும் மன்றில் முன்னலையாகும்படி அழைப்பாணையும் விடுத்துள்ளார்.