ரஷ்யாவின் இராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி…

கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக, சென்ற வருடம் ரஷ்யாவின் இராணுவ செலவினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இராணுவத்துக்கு உலக நாடுகள் எவ்வளவு செலவு செய்கின்றன என்பது குறித்த அதன் ஆண்டு மதிப்பீட்டில் 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக ஸ்டாக்ஹாம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சீனா இராணுவத்துக்கு செலவு செய்யும் தொகையை சுமார் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

மிகப்பெரும் இராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவ செலவு நிலையாக உள்ளதாகவும், அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் இராணுவ செலவின் கூட்டுத் தொகைக்கு அமெரிக்காவின் செலவு தொகை சமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.