சிரியா விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் இராணுவத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும், புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிரிய இராணுவம் இரசாயன குண்டுகளை வீசுவதாக கூறி அதை தடுக்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கூட்டு படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் சிரியாவில் உள்ள இரசாயான ஆயுத தயாரிப்பு கூடம், இரசாயன ஆயுத கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு தொடர்ந்து ரஷ்யா ஆதரவு அளித்து வருவதை தடுக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக மேலும் பொருளாதார தடைகள் கொண்டுவர இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளதுடன், இந்த அறிவிப்பு இன்றே வெளிவர இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.