உக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சினையை மையப்படுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புதினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்தது.
ஆனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களும், மாலுமிகளும் இன்னும் உக்ரைனுக்கு திரும்பிவராத நிலையில் புதினுடனான சந்திப்பை இரத்து செய்ய தீர்மானித்துள்ளேன் எனவும் இந்த பிரச்சினை தீர்ந்த பின்னர் கூடிய விரைவில் அர்த்தமுள்ள ஒரு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்