ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி. நிதிமுறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி இவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் தனக்கு தொடர்பில் இருக்கும் அரசியல் வாதிகள் பெயரை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 இந்திய வீரர்களும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஒருவரும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக லலித்மோடி குற்றச்சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் ரியல் எஸ்டேட் அதிபரும், சூதாட்டதரகருமான பாபா திவானுடன் தொடர்பு வைத்துள்ளனர். இவரிடம் இருந்து வீரர்கள் லஞ்சமாக பணம் பெற்று உள்ளனர்.
பிளாட்டுகளும் பரிசாக பெற்றுள்ளனர். இது வீரர்களின் நேர்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இது எல்லாம் உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன். ஒரு வேளை உண்மையாக இருந்தால் இன்றும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை அதிகாரி தேவ் ரிச்சர்டனுக்கு 2013–ம் ஆண்டு இந்த தகவலை அனுப்பி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில் சூதாட்டம் தொடர்பாக லலித்மோடி தகவல் அனுப்பி இருந்ததை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
லலித்மோடி அனுப்பி வைத்த மிகவும் ரகசியமான இமெயில் 2013–ம் ஆண்டு ஜூன் மாதம் கிடைக்க பெற்றோம். இது தான் சமீபத்தில் டுவிட்டரில் வெளியாகி இருந்தது.
இந்த கடிதத்தை ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இவ்வாறு ஐ.சி.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லலித்மோடியின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு பீகார் சங்க தலைவர் ஆதித்ய வர்மா ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து ஐ.சி.சி. தனது பதிலை தெரிவித்துள்ளது.