ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், உலகக் கிண்ண கனவை கைவிட்டது…

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (30) நடைபெற்ற முதல் நாக் – அவுட் போட்டியில் பிரான்ஸ், ஆர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

அதன்பின் 62வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.