ரோஹிஞ்சா முஸ்லிம்களில் குற்றம் சுமத்தும் மியன்மார்

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்ந்தும் நிர்க்கதியான நிலையில் இனப்படு கொலைகளுக்கு உள்ளாகி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

மியன்மாரில் ஒதுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வரும் ‘ரோஹிஞ்சா முஸ்லிம்கள்’ தங்களின் சுய உரிமைகளுக்காக அந்நிய நாடுகளில் பிரஜாவுரிமை கோரி ஆபத்தான கடல் பயணங்களில் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மியன்மார் இராணுவ அரசாங்கம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இன ஒடுக்குமுறையே அந்த மக்கள் அந்நிய நாடுகளில் புகலிடம் கோருவதற்கான அடிப்படைக் காரணமாகவுள்ளது.

2600 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அடைக்கலமின்றி நடுக்கடலில் படகில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்காசிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக ஆராயும் பிராந்திய நாடுகளின் கலந்துரையாடல் தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்றது.

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஐ. நா பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியன்மார் பிரஜைகளாக அறிவிக்குமாறு ஐ.நா சபையின் பிரதிநிதிகள் கோரினர்.

எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்த மியன்மார் ஆட்சியாளர்கள், உள்நாட்டு சட்டத்தை மீறியே வெளிநாடுகளில் புகலிடம் கோரும் செயற்பாடுகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினர்.

பௌத்த நாடான மியன்மாருடனான உறவுகளை முறித்துவிட்டு ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு மற்றொரு பௌத்த நாடு என்ற ரீதியில் அடைக்கலம் கொடுப்பதில் சிக்கல் உள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக தஞ்சம் வழங்கி இந்தோனேஷியாவும் மலேசியாவும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை அரவணைத்தாலும் நிரந்தரமாக புகலிடம் கோரி இன்னொரு தேசத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளமை நெஞ்சை உருக்குகின்றது.