இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான 14ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக 03 போட்டிகளில் தோல்வியை தழுவி கடும் விமர்சனத்திற்கு உள்ளான மும்பை அணி, இந்த வெற்றியின் மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய மும்பை அணி, ரோஹித் சர்மாவின் அதிரடியின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை குவித்தது.
அதிகபட்சமாக சர்மா 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், குரே ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 214 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.
இதனால் அவ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் குர்ணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.