லக்கலை ஆயுத கடத்தல் விவகாரம் – விசாரணைகள் துரிதம்

மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமற்போன துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, மாணிக்கக்கல் வியாபாரி, பொலிஸ் சேவையில் ஈடுபட்ட சுமார்80 பேரிடம், இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, காணாமற்போன துப்பாக்கிகள், பொலிஸ் நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள விகாரையொன்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவற்றில் பதிந்துள்ள கைவிரல் அடையாளங்களைப் பெறுவதற்காக, அத்துப்பாக்கிகளைக் கொழும்புக்குக் கொண்டுசென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், லக்கல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.