சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்திற்குச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கமைவாக காலாவதியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமை, காலாவதி திகதி அற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டமை, எலியின் நடமாற்றம் மற்றும் அதன் எச்சங்கள் பொருட்களுடன் கலந்துள்ளமை களஞ்சியசாலை உரிய முறையில் பராமறிக்கப்படாமை, நிலப்பகுதி அழுக்காக காணப்பட்டமை போன்ற 5 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து குறித்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்திற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியினால் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த 25 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த லங்கா சதொச விற்பனை நிலையத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டார்.
அதற்கமைவாக லங்கா சதொச விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதோடு அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் நிவர்த்தி செய்த பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த லங்கா சதொச விற்பனை நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சதொச விற்பனை நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சதொச விற்பனை நிலைய த்தின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த நபரை கடுமையாக எச்சரித்ததோடு, இரண்டாவது தடவையாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதவான் 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையினை செலுத்துமாறும் உத்தரவிட்டார்.