லஞ்சம் கிடைக்காத அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் – நிஷங்க

லஞ்சம் கேட்டும் கிடைக்காத காரணத்தினால் கோபமுற்றுள்ள அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக நிஷங்க சேனாதிபதி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்

குறித்த நேர்காணலொன்றில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது தேர்தல் செலவுகளுக்கு என்னிடம் பணம் கேட்டார். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். அத்துடன் அவரது அரசியல் எதிரியான உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக செலவழித்தேன்.

இதன் காரணமாக அவர் என்மீது கடுயைமான காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவின் ட்ரோலர் கப்பல்களுக்கு அவண்ட்கார்ட் நிறுவனமே பாதுகாப்பு வழங்கியிருந்தது. எனினும் அவரது ஆதரவாளர்களை எமது சேவையில் இணைத்துக் கொள்ள மறுத்த காரணத்தினால் அவரும் எங்கள் மீது கோபமாக இருந்தார். ஆனாலும் அவருக்கு லஞ்சமாக கொடுத்த காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் விபரங்கள் என்னிடம் உள்ளது.

அமைச்சர் அர்ஜுனவும் என்னிடம் பணம் கேட்டார் . கொடுக்காத காரணத்தினால் அவரும் தனிப்பட்ட பகை கொண்டிருந்தார். இதன் காரணமாகவே இந்த மூன்று அமைச்சர்களும் எங்கள் நிறுவனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ஆனால் நாங்கள் வருடமொன்றுக்கு 3400 மில்லியன்கள் அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துள்ளோம்.சட்டத்திற்குப் புறம்பான எதையும் நாங்கள் செய்யவில்லை.

அதன் காரணமாகவே அமைச்சர்கள் லஞ்சம் கேட்டபோது கொடுக்க மறுப்புத் தெரிவித்தோம்.நாங்கள் சட்டபூர்வமாக உழைப்பதில் யாருக்கும் லஞ்சம் கொடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை. அதனால் தான் எங்கள் வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளது என்றும் அவண்ட் கார்ட் தலைவர் நிஷங்க சேனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.