லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு..

தனது நாட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக சந்தேக நபரை நாடு கடத்துமாறு அமெரிக்க அரசாங்கம் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட அஹமத் பாக்கி எனும் லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை நாடு கடத்த உத்தரவிடுமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின்னரே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை அரச தரப்பின் வேண்டுகோள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது கட்சிக்காரருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பதிலளித்த நீதிபதி, சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆதாரங்கள் நீதிமன்றம் முன் இருப்பதாக கூறியதோடு அவரை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்டார்.

எனினும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தமக்கு இந்த தீர்ப்பில் திருப்தியில்லை என்றும் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)