வடகொரிய அதிபர் வியட்நாம் விஜயம்…

வியட்நாமிற்கு விஜயம் செய்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

அதை தொடர்ந்து மீண்டும் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை(27) மற்றும் நாளை மறுதினமும் (28) சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பியாங் யாங்கில் இருந்து தனி புகையிரதம் மூலம் வியட்நாம் தலைநகர் ஹனோய் புறப்பட்டு சென்றார்.

வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

டிரம்ப்-கிம் வருகையை யொட்டி வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும், பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.