வட மாகாணத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது அரசியல் அழுத்தங்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெற்று வருகின்ற காடழிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை தான் ஏற்கனவே பிறப்பித்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம், மன்னார் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பும், வவுனியா மாவட்டத்தில் 325 ஏக்கர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 445 ஏக்கர் நிலப்பரப்பும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
வடக்கில் காடழிக்கப்பட்டு மீள்குடியேற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றமைக்கு அரசியல் அழுத்தங்களும் காரணமாக அமைந்திருந்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறு இடம்பெறுகின்ற சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் தான் உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விரைவில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
குறித்த குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் ஊடாக பெறப்படும் அறிக்கையின் பிரகாரம், காடழிப்பு தொடர்பில் தான் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், இயற்கை வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த தான் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், மாணிக்கக்கல் அகழ்விற்காக தமது அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான தகவலை நிராகரித்த ஜனாதிபதி, தான் ஆட்சி பீடத்திற்கு வந்தவுடன் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவ்வாறான நான்கு வெளிநாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.