வடக்கில் இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு….

இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(03) மூன்றாவது நாளாக தொடர்கின்றதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை தலைமைக் காரியலாயத்திலிருந்து சிறப்பு குழுவொன்று இன்று(03) வடக்கிற்கு விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பழைய மத்திய பேரூந்து நிலையத்தை மூடி, புதிய மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பேருந்து சாலை ஊழியர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து பல தரப்பினர்களையும் இணைத்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்கம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.