வட் வரி அதிகரிப்பால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதென்பது பொய் – கெமுனு

எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணமானது அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வட் வரி அதிகரிக்கப்பட்டமை காரணம் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, வாகன உதிரிப்பாகங்கள், இயந்திர எண்ணெய் (Engine Oil), வாகனங்களுக்கான குத்தகை, காப்புறுதி, புகை பரிசோதனை, பஸ்களின் கொள்வனவு என்பவற்றின் விலை அதிகரிப்பும், நாட்டின் ரூபாய் வீழ்ச்சியுமே பஸ் கட்டண அதிகரிப்புக்கு காரணம் என தெரிவித்தார்.

அதிகரிக்கப்பட்ட வட் வரியே பஸ் கட்டண அதிகரிப்புக்கும் காரணமென அனைவரும் கூறுவது பொய்யான தகவல் என இவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தனியார் பாவனைகளுக்காக வாகனங்களின் கொள்வனவானது தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை ஆறு இலட்சம் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கெமுனு கூறினார்.

இதன்காரணமாக பஸ்களை நாடும் ஆறு இலட்சம் மக்கள் விலகியுள்ளனர். இதனால் பஸ் சேவையைக் கொண்டு நடத்த முடியவில்லை என இவர் சுட்டிக்காட்டினார்.

வாகனங்களின் கொள்வனவு அதிகரித்துள்ளதால் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதோடு, அதிகளவான புகை வெளியிடப்படுகின்றது, இதனால் சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக இவர் தெளிவூட்டினார்.

மேலும் ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவதற்காகவே இந்த நல்லாட்சியை கொண்டு வந்தோம், ஆனால் சில அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு எதிர் பார்த்திருப்பதாகவும், அவர்கள் தொடர்பிலான அறிக்கையை பிரதமரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை எடுத்திருப்பதாகவும் இதன்போது தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.