வட கொரியாவை அச்சுறுத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்ப கடல்பகுதியில் முற்றுகை..

உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்றும் மிரட்டியது.

இதனையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக்கப்பல்கள் கொரிய தீபகற்ப கடல்பகுதியை முற்றுகையிட்டுள்ளன. இந்நிலையில், ஜப்பான் தன்னுடைய மிக பெரிய போர்க்கப்பலை அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுப்பியுள்ளது.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் கார்ல் வின்சனையும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும் மூழ்கடித்து விடுவதாக வட கொரியா மிரட்டியுள்ளது.

 

(rizmira)