வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு 1.15 பில்லியன் ரூபா நிதியினை நோர்வே வழங்கவுள்ளது
நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரென்டே இதனை தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரென்டே ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (UNDP) வழங்கப்படும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரென்டே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்நிதியானது உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும், தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதேசங்களை கட்டியெழுப்புவது தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 5 மில்லியன் குரோன்களை நோர்வே வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.