வன்முறையை கையில் எடுத்துள்ள காவிகள்; சிறுபான்மையினர் அடிபணிய முடியாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய அணுகுமுறையைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்பேசும் மக்கள் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் அளித்த வாக்குகள் அனைத்தும் வீண்விரயமாக்கப்பட்ட வாக்குகள் என்பதே உண்மையாகும்.

எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கவில்லை என்பதை பாடமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய அணுகுமுறையைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

யுத்த முடிவின் பின்னரும் , உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் , கிடைத்த அநுபவங்களின் அடிப்படையில் புதிய கோரிக்கைகளைக் கலந்து முன்வைத்து புத்தம் புதிய ஆணையினை மக்களிடம் இருந்து பெறுதல் அவசியமாகும்.

அதிகாரத்தை துறந்து புத்தர் காட்டிய ஆன்மீக ரீதியான வாழ்வியல் கல்விக்கு புறம்பாக வன்முறையை கையில் எடுத்துள்ள காவிகள் நாடெங்கும் காவித் திரிகிற அரசியலுக்கு சிறுபான்மையினர் அடிபணிய முடியாது. இவ்விறுதித் தருணத்திலாவது தமிழ்பேசும் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அழுத்தத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்களும் மக்களும் தமது தலைவர்களுக்கு கொடுக்கவேண்டும்.