வர்த்தமானி விவகாரம்!- முடிவை மாற்றிக்கொண்ட மகிந்த ராஜபக்ச

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தனது பெயரை களவாக பயன்படுத்தியமைக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கூறிய போதிலும் தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

2003ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த கே.என். சொக்சி கீழ் வெளியிடப்பட்ட பிணை முறிப்பத்திரத்திற்காக 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவே கையெழுத்துள்ளார் என்பதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இலக்கம் 1791/13 கீழ் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதியே கையெழுத்திட்டுள்ளார்.

2003ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி 7 வீத வட்டியின் கீழ் வெளியிடப்பட்ட 7 ஆயிரத்து 41 மில்லியன் ரூபாவுக்காக பிணை முறிப்பத்திரம்,

2013 ஆகஸ்ட் 15ம் திகதி 7.5 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 19 ஆயிரத்து 623 ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2003ம் பெப்ரவரி 1ம் திகதி 8.5 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 11 ஆயிரத்து 47 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2003ம் ஜூலை 15ம் திகதி 8.5 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 41 ஆயிரத்து 24 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்

ஆகியன உள்ளடங்கும் வகையில் நிதியமைச்சர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

அது மாத்திரமின்றி வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதி 2013 ஜனவரி 1ம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் 2013ம் ஜனவரி 1ம் திகதி வெளியிடப்பட்டது எனக் கூறப்பட்டாலும் அதில் 2013ம் ஆண்டு ஆரம்பம் முதல் இறுதி வரை வெளியிடப்பட்ட பிணை முறிப்பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி 9 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 20 ஆயிரத்து 9 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஆண்டு செப்டம்பர் 20ம் திகதி 12 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 24 ஆயிரத்து 258 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஜூன் 1ம் திகதி 9 வீத வட்டியில் வெளியிடப்பட்ட ஒரு லட்சத்து ஓராயிரத்து 456 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஆண்டு மே 1ம் திகதி 8 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 92 ஆயிரத்து 784 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி 9 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 33 ஆயிரத்து 809 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஆண்டு மே 1ம் திகதி 9 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 11 ஆயிரத்து 44 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம்,

2013ம் ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி 9 வீத வட்டியில் வெளியிடப்பட்ட 21 ஆயிரத்து 50 மில்லியன் ரூபாவுக்கான பிணை முறிப்பத்திரம் தொடர்பான விபரங்கள் அந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் 2003 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பிணை முறிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக 2008, 2009, 2010, 2011,2012ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பிணை முறிப்பத்திரங்கள் சம்பந்தமான விபரங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முடிந்தால் வழக்கு தொடருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த சவாலை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி தற்போது உண்மை புரிந்து அதில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.