கடும் வரட்சிநிலை காரணமாக கடந்த 29ம் திகதி காலவரையறையின்றி மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்திற்குரிய மூன்று பீடங்களில் இரண்டு பீடங்கள் எதிர்வரும் திங்களன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலுள்ள முகாமைத்துவப் பீடம் மற்றும் விஞ்ஞான பீடம் ஆகிய பீடங்களே திங்களன்று திறக்கப்படும் என ரஜரட்ட பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எம்.ஜி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த இரு பீடங்கள் மற்றும் விடுதிகளுக்கும் இலங்கை நீர்பாசன, நீர்முகாமைத்துவத் திணைக்களத்தினால் போதுமானளவு நீர் விநியோகிக்கப்படும் என மேலும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆதலால், குறித்த இரு பீடங்களுக்குமான மாணவர்களை ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு முன்பதாக தங்களது விடுதிகளுக்கு திரும்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.