வறண்ட பாதங்களை மென்மையாக்க இதை ட்ரை பண்ணுங்க..

நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை பார்க்கலாம்.

பொதுவாக உடலில் நீர்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சவர்க்காரம் பயன்படுத்தி கழுவுவதாலும் இது ஏற்படலாம் .
சோரியாசிஸ் , மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.

பாதங்களை பாதுகாக்க வேண்டும்:
பாதங்களை பாதுகாப்பதில், அதனை வறண்டு போகாமல் இருக்க செய்வதே ஒரு எளிய மற்றும் முதல் வழி .

ஈரப்பதத்தை செலுத்துங்கள்:
பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கப்படுகிறது.
விரல்களுக்கு இடையில் இதனை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும். பாதங்கள் வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம்கொடுக்கும் போது வெடிப்புகள் ஏற்படலாம்.

குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதனை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.

நாம் பயன்படுத்தும் கடினமான சவற்காரங்கள் மற்றும் குளிர் காலத்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பலமிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகிறது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.

தேன்:
தேன் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பாக்டீரியா , பூஞ்சை போன்றவற்றை எதிர்த்து சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆகையால் பாதங்கள் வறண்டு காணப்படும்போது சிறிதளவு தேனை பாதங்களில் தடவுவதால் சிறந்த நன்மை கிடைக்கும்.

அவகேடோ:
அவகேடோவில் அதிகமான அளவு கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ஆகையால் இது ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர் . அவகேடோவை உங்கள் பாதங்களில் தேய்த்து 10-15 நிமிடம் கழித்து கழுவதால் பளிச்சென்ற பாதத்தை பெறலாம். பாதங்களை மென்மையாக்கி அழகுடன் இருக்க மேலே கூறிய முறைகளை பின்பற்றுவோம்.