வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு……

இலங்கையில் வறுமை காரணமாக பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பனவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் 4,52,661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை எனவும் இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. “மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது” என கூறுகின்றது எனவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது” என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

“கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது தொடர்பில்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.