வலதுக்கு – வலது, இடதுக்கு இடது..- மாறி மாறி பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்…

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 03 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காஞ்சி வீரன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் சேர்த்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சகல துறை வீரரான மோகித் ஹரிகரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் தலா 5×4 ஓட்டங்கள், 5×6 ஓட்டங்களுடன் 77 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களம் இறங்கியது. 19.1 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது காஞ்சி வீரன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மோகித் ஹரிகரன் பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்தார். இதற்கு காரணம் இரண்டு கைகளாலும் பந்து வீசியதுதான்.

இடது கை துடுப்பாட்டக்காரர் துடுப்பாட்டம் செய்யும் போது வலது கையாலும், வலது கை துடுப்பாட்டக்காரர் துடுப்பாட்டம் செய்யும் போது இடது கையாலும் பந்து வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. என்றாலும் அனைத்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.