வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞனை செட்டிக்குளம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த சில நாட்களாக மனநிலை குழப்பமடைந்து காணப்பட்டதுடன், கடந்த மூன்று தினங்களாக வீட்டிற்கு வராமல் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.
இதனையடுத்து குறித்த சிறுமியைத் தேடிய பெற்றோர் செவ்வாய்க்கிழமை சிறுமியை கண்டுபிடித்து செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போதே குறித்த 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞனை கைது செய்ததுடன், குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.