வஸீம் கொலை விவகாரம் – பொலிஸ் உயரதிகாரிகள் அறுவரிடம் விசாரணை..?

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் உயரதிகாரிகள் அறுவரிடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பொலிஸ் உயரதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வஸீம் தாஜுதீனின் கொலையை, வாகன விபத்தாகத் திரிபுபடுத்தும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் தனக்கு அழுத்தங்களைப் பிரயோகித்ததாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது, நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ‘பி’ அறிக்கையொன்றை, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், மேற்படி முன்னாள் பொறுப்பதிகாரியின் தகவல்களுக்கமைய, எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, வஸீம் தாஜுதீன் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்தக் காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன. அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அன்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.