வஸீம் தாஜுதீன் படுகொலை – நண்பனுக்கு வந்த அழைப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை..

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் மிக சூட்சுமமான விசாரணை ஒன்றினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவ உயர் அதிகாரி ஒருவரிடம் சிறப்பு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வஸீமின் படுகொலை இடம்பெற மிக அண்மித்த நிமிடங்களில் வஸீமுடன் ஒன்றாக காரில் பயணம் செய்ததாக நம்பப்படும் ஜெயபிரகாஷ் எனும் அவரது நண்பருக்கு வந்த சந்தேகத்துக்கு இடமான அழைப்பு தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்லா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவே இந்த விசாரணைகளை நடத்தியுள்ளது.

தாஜுதீன் கொலையுடன் ஏதோ ஒரு விதத்தில் குறித்த சந்தேகத்துக்கு இடமான அழைப்பு தொடர்புபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் புலனாய்வுப் பிரிவு இதற்கு முன்னர் வஸீமின் நண்பரான ஜெயபிரகாஷிடமும் இதற்கு முன்னர் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த இராணுவ உயர் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(rizmira)