பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி ஏழாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் தாஜுதீன் மரணம் தொடர்பான தெளிவான தீர்ப்பொன்று இன்று வழங்கப்படவிருந்த நிலையில், அதனை தவிர்த்து விபத்து மரணம் என்று தீர்ப்பளிக்குமாறும், அல்லது தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் நீதித்துறைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த தகவல்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்று பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஜனவரி ஏழாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி நிசாந்த பீரிஸ் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாத்தறைக்கு இடமாற்ற உத்தரவொன்றையும் பெற்றுள்ளார்.
எனவே ஏழாம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது வேறு நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார்.
அனுர சேனநாயக்கவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க. மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பான தகவல்களை மறைக்க உதவினார்களா என்பதைக் கண்டறியும் பொருட்டு இவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
மேலும் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பான காணொளிகளை கொழும்பு பல்கலைக்கழக தடயவியல் துறையின் ஆய்வுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிபதி நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தேவையேற்படும் பட்சத்தில் தடயவியல் ஆய்வுகள் குறித்து வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்ளவும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.