றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த வழக்கு நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக,தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது நீதிமன்றத்தில் தகவலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இந்தக் கொலை தொடர்பாக இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேகநபரான சுமித் பெரேராவால் வஸீம் தாஜூடினின் சகோதரருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விடயம் தொடர்பிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தகவல் வழங்கினர்.
இதற்கிணங்க இது பற்றி தாஜூடினின் சகோதரரிடம் வாக்குமூலம் பெறவும் அவர்கள் அனுமதி கோரிய நிலையில் நீதவானும் அதற்கு அனுமதியளித்துள்ளார்.