வாடகை தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தை குட்டிகள் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பிறப்பது தற்போதைய நாகரீக உலகில் சாத்தியமானது. குழந்தைப் பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பலன் அடைந்துள்ளனர். அதே போல் கருவுற இயலாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் முறையும் உள்ளது.

ஆனால் உலகில் முதன்முறையாக விலங்குகளில் இவ்வகை கருத்தரித்தல் மருத்துவ முறையை உபயோகித்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

உலகில் முதல் முறையாக அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில், வாடகைத் தாய் மூலமாக சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் கிபிபி என்ற சிறுத்தை ஒரு சில மருத்துவ காரணங்களால் தாய்மை அடைய முடியாத நிலையில் இருந்தது இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளை பிரித்து, ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை இஸ்ஸி என்ற சிறுத்தையின் கருப்பைக்குள் ஆய்வாளர்கள் செலுத்தினர்.

இந்நிலையில், இஸ்ஸி சிறுத்தை இரண்டு குட்டிகளை ஈன்றதாக கொலம்பஸ் உயிரியியல் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.