வாயில் உண்டாகும் அல்சரை குணப்படுத்த இயற்கையான வழிகள் வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடியும்.
வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம். அந்த இயற்கையான முறைகள் எவையென்று பார்ப்போம்.
தேங்காய்:
வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சைத் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கீற்றுக்கள் தினமும் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் வாய்ப்புண் ஆறும். மேலும் தேங்காயைப் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நற்பலன்கள் கிடைக்கின்றன. தேங்காயை பால் எடுத்து அத்துடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ப்ளர் அருந்தி வந்தால் மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம்
கொய்யா:
வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
தேன்:
தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும்.
வாழைப்பழம்:
கனிந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அதிலுள்ள விட்டமின் பி6 மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் சத்துக்கள் வாய்ப்புண்ணை ஆற்றுவதோடு அதற்கு காரணமான உள்ளார்ந்த வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்துகிறது.
தக்காளி:
தக்காளியை ஜுஸாக பருகினாலும் அத்துடன் கேரட்டையும் தேனையும் சேர்த்து ஜுஸ் செய்து பருகினாலும் வாய்ப்புண் நீங்குவதோடு சருமமும் பளபளப்பை பெறும். அதிக குளிர்ச்சியான உடல்வாகுடையவர்கள் இதை தவிர்த்து விடவும்.
வெங்காயம்:
வெங்காயத்திற்கு வயிற்றுப் புண்ணையும் வாய்ப்புண்ணையும் ஆற்றும் ஆற்றல் உண்டு. வெள்ளை வெங்காயம் இன்னும் அதிகப் பலன்களைத் தரும். வெள்ளை வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். இது அற்புத பலன்களைத் தரவல்லது.