நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் தங்களுக்குத் திரையுலகில் நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக எழுதி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த சர்ச்சையில் அடிபட்டவர்கள் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவர் குறித்த பதிவுகளும் புகைப்படங்களும்தான் அதிகமாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில் தனுஷின் சகோதரி விமல கீதா உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;
“…கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம், பல்வேறு பிரச்சினைகளால் மிகவும் வேதனையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மனிதனின் கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் எங்களுக்கு உணவும் கல்வியும் நாங்கள் இன்று அனுபவிக்கும் அனைத்தும் கிடைத்தன. தேனியில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்றால் அந்த வசதி ஓர் இரவில் வந்ததல்ல. தியாகம் எதுவும் செய்யாமலும் வந்ததல்ல. எங்கள் சகோதரர்கள் விமர்சனங்களும் அவமானங்களும் பட்டே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
எங்களுக்கு எவ்விதமான ஒழுக்கங்கள் சொல்லித் தரப்பட்டன, எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தோம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். கடின உழைப்பால் தனுஷ் இன்று மிகப்பெரிய நட்சத்திரம் ஆகியுள்ளார். ஆனால் இந்தப் புகழுக்கு விலை உள்ளது என நினைக்கிறேன். பழிவாங்கும் செயல்கள் எல்லா விதங்களிலும் சாத்தியம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் நடத்தையில் களங்கம் விளைவிப்பது சாத்தியம். ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகருக்கு இதுதான் கிடைக்குமா?
ட்விட்டரில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பதிவு செய்யலாம் என்றாகிவிட்டது. 12 வயது சிறுவன கூட ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்க முடிகிற சமூக வலைத்தளத்தில்தான் மோசமான பாலியல் தொடர்புடைய வீடியோக்கள் வெளியாகின்றன. இதுபோன்ற மோசமான வீடியோக்களைக் கேட்கும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. எங்கள் குடும்பம் நிறைய சோதனைகளைச் சந்தித்துள்ளது. ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்வோம்.
மிகுந்த மனவேதனையுடன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து நான் விலகுகிறேன். யாரிடமும் பேசவோ சந்திக்கவோ விருப்பம் இல்லை. இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் நிறுத்துங்கள். ஒருவர் முக்கியமாக பெண்கள் இதன் விளைவாக சாகும் வரை சென்றால் அந்த உயிரைத் திருப்பித் தரமுடியுமா? வாழு வாழ விடு….” என்று கூறியுள்ளார்.