இலங்கைத் திருநாடானது பௌத்தர்களுக்கு உரித்தானது என மாகாநாயக்க தேரர் தெரிவித்திருந்த போதிலும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர், சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வட மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றக்கூடாது என்ற வடமாகாண முதலைமைச்சரின் கருத்தானது, அவரது அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதென அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண முதலமைச்சர் நாட்டின் அரசியல் யாப்பை மதித்து செயற்படவில்லை எனவும் குற்றஞ் சாட்டியுள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்படுகின்றது. அதனை சிங்கள மக்கள் அல்லது சிங்களத் தலைவர்கள் மாத்திரமா மதித்து நடக்கவேண்டும் என்ற கேள்வி இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது.
நாம் இனவாதத்தை கக்குகின்றோம் என கொக்கரிகிரீர்கள். ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
வடக்கில் சிங்களவர்களை குடியேற்றினால் அது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகும் என்கிறார். வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்.
மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தில் நீருக்கான உரிமை வேண்டும் என்கிறார். இவ்வாறு பல விடயங்களை கூறிவருகின்றார்.
நாட்டின் தென்பகுதியையோ அல்லது கொழும்பையோ அறிந்திராத ஒருவரைப்போலவே அவர் கதைக்கின்றார். இன்னொரு கலவரத்திற்கு முன்பதாக வடக்கில் உருவாகியிருக்கும் இவ்வாறான இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.