விக்னேஸ்வரனுக்கு கண்டனம் தெரிவித்து மஹிந்த – விமல் குழு ஆர்ப்பாட்டத்தில்..

யாழில் எழுக தமிழ் பேரணியில் முதலமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து இன்று(03) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்த்தரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் மகளிர் பிரிவினர் முன்னெடுத்துள்ளடன், ஐம்பது பேர் வரையிலான பெண்கள் குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் மோசமான இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த கருத்துக்களை அவர் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளை திருப்தி படுத்துவதற்காக நாட்டை பிளவுபடுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பை தயாரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.