யாழ்ப்பாணத்தில், இடம்பெறுகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று(14) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. .
இவ்விசேட சுற்றி வளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 16 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 7 பேர் உள்ளிட்ட 40 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போக்குவரத்து தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மொத்தமாக 152 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நேற்று மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.