கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பயணம் திருப்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று காலை 11.15 மணிக்கு காரில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கோயம்பேடு செல்ல தேமுதிகவினர் அவருக்காக மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தனர்.
முதலில் மெட்ரோ ரயில் நிலையத்தை விஜயகாந்த் சுற்றிப் பார்த்தார். பிறகு எஸ்கலேட்டரில் ஏறி நடைமேடைக்கு வந்தார். அங்கிருந்து பரங்கிமலை பாதையை பார்வையிட்டார்.
மெட்ரோ ரயில் வருவதற்கு தாமதம் ஆனதால் பிளாட்பாரத்தில் உள்ள நாற்காலியில் 10 நிமிடம் அமர்ந்திருந்தார். அவருடன் இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
அப்போது விஜயகாந்தை பார்த்த பெண் பயணிகள் அவருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். உடனே விஜயகாந்த் அருகே அமர்ந்திருந்த பார்த்தசாரதி எம்.எல்.ஏ. எழுந்து இடம் கொடுத்ததும், பெண் பயணிகள் விஜயகாந்த் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் மெட்ரோ ரெயில் வந்ததும் விஜயகாந்த் அதில் ஏறி பயணித்தார். அவருடன் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரகுமார், மாவட்ட செயலாளர்கள் வி.எம்.காமராஜ், வி.என்.ராஜன், யுவராஜ், பொருளாளர் இளங்கோவன், ஆலந்தூர் பகுதி செயலாளர் நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் செல்வ ஜோதிலிங்கம் உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் சென்றனர்.