விஜய் பட ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு அனுமதியா?’

“விஜய் படத்துக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை’ என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த 1 ஆம் திகதி முதல் புதுப்படங்கள் எதையும் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

மேலும், கடந்த 16 ஆம் திகதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள விக்டோரியா ஹாலில் விஜய் நடிக்கும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

‘மற்ற படங்களின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, விஜய் படத்துக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதி கொடுத்ததா?’ என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மத்தியிலும் விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “வேலைநிறுத்தம் பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட போதே, ஏற்கெனவே சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தால், ஓரிரு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். காரணம், இதனால் தயாரிப்பாளர்களின் பணம் வீணாகும். அந்த அடிப்படையிலேயே விஜய் படத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி கோரியதால், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

விஜய் படத்துக்கு மட்டும் இந்த அனுமதி தரப்படவில்லை. மதுரையில் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இரண்டு நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்பதால், அவருக்கும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் இன்னும் சில நிறுவனங்களும் அனுமதி பெற்றுள்ளன. எனவே, விஜய் படத்துக்கு மட்டும் தான் சிறப்பு அனுமது என்பது தவறான தகவல்” என்று துரைராஜ் தெரிவித்துள்ளார்.