விடைபெறும் சங்கக்காரா: வெற்றியுடன் வழியனுப்ப முடிவு செய்த மேத்யூஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே விடைபெறும் சங்கக்காராவுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

அதாவது கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் ஆகஸ்டு 20 முதல் 24ம் திகதி வரை நடக்கும் 2வது டெஸ்ட் அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இதனால் இலங்கை அணிக்கு சிறந்த பங்காற்றிய சங்கக்காராவை சிறப்பாக வழியனுப்ப கிரிக்கெட் வாரியம் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

இதற்கிடையில் இந்திய டெஸ்ட் தொடரை கைப்பற்றி அதை விடைபெறும் சங்கக்காராவுக்கு பரிசளிக்க போவதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் மறக்க முடியாதது.

ஏனெனில் சுழற்பந்து ஜாம்பவானான முரளிதரன் 800 விக்கெட்டுகள் சாதனையுடன் விடைபெற்றார். அதே போல் இலங்கை அணியின் மிகச் சிறந்த வீரரான சங்கக்காரா ஓய்வு பெறப்போகிறார்.

இது இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த நிகழ்வாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது தான் அவருக்கு அளிக்கும் பரிசாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.