இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலோ மெத்தீவ்ஸ் இன்று(12) விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இன்றே புதிய தலைவரும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தொடர் தோல்வியை அடுத்து எழுந்த விமர்சனங்களை கருத்திற் கொண்டே ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் இறுதி போட்டிக்கு முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் தாம் விமர்சனங்களால் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருப்பதாகவும், தலைவராக தொடர்வது குறித்து சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இலங்கை அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை வெளிப்படுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் குமார் சங்ககார, இலங்கை அணியின் தோல்வி தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“..Quo Vadis Sri Lanka cricket?’ இதன் அர்த்தமானது, “இலங்கை கிரிக்கெட் எந்த திசை நோக்கி பயணிக்கின்றது”.
இதேவேளை, குறித்த டுவிட்டரின் ஊடாக மேலும் கருத்து தெரிவித்துள்ள சங்ககார, தோல்விக்கு பின்னர் கிரிக்கெட் நிர்வாகம், வீரர்கள், ரசிகர்களுடன் அணியின் அதிகாரிகளது உணர்வுகள் எப்படி இருக்கும் என தெரியும், மேலும் இலங்கை அணிக்கு தற்போது உதவி தேவையென்றும், அரசியல் போன்ற தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டாம்..” எனவும் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.