விமல் மற்றும் கம்மன்பிலவின் முன்னணிக் கனவுகள் கனவாகுமா?

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரினால் உருவாக்கப்படவுள்ள எதிர்கட்சி முன்னணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை இணைத்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைக்காமையினால் பெரிய அளவிலான பிரச்சினை ஒன்று ஆரம்பித்துள்ளதாக அக்குழுவின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சியில் அமர்வதற்கு ஆயத்தமாகியுள்ள உறுப்பினர்கள் முன்னணி மற்றும் சுதந்திர கட்சியை விட்டு விலகுவதற்கு ஆயத்தமாக இல்லை என்பதும் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும்.

எதிர்க்கட்சியில் அமர்வதற்கு இவர்களுக்கு ஜனாதிபதியினால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தனியாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை குமார் வெல்கமவுக்கு வழங்குமாறு கோரி 56 பேர் கையொப்பமிட்டிருப்பது அதற்காக ஜனாதிபதியின் இணக்கம் கிடைக்கும் என்ற விமல் வீரவன்சவின் கருத்தை நம்பியமையினாலாகும்.

குறித்த கடிதத்தை சபாநாயகரிடம் அனுப்பி வைக்காமல் ஜனாதிபதியிடம் அனுப்பி வைத்தமையும் இவ்வாறான ஒரு நம்பிக்கையினால் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இச் செயற்பாட்டிற்கு ஜனாதிபதியின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலைமை காரணமாக விமல் மற்றும் கம்மன்பிலவின் முன்னணி கனவு நாளுக்கு நாள் தளர்த்தப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

(riz)