விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கை – ரஷ்ய உறவில் விரிசல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

 

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட்   (Aeroflot) ‘ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அதனை மையப்படுத்தி ரஷ்யா – இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

தனது  விமானம் தடுத்து வைக்கப்பட்டமைக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,  ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவர் ஜனிதா லியனகே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு  நேரில் அவரிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில்  ரஷ்ய ஏரோபுளொட் விமான நிறுவனம் கொழும்பிற்கான தனது வணிக விமான பயணங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தியுள்ளது.

இலங்கையில் தனது விமானங்கள் தடையின்றி பறப்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச் சீட்டு விற்பனையும் இதனால்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  ஏரோபுளொட்  நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று ( 4) ரஷ்யாவிலிருந்து கொழும்பு நோக்கி  275 பயணிகளுடன் வரவிருந்த விமானம் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளது.

எனினும்  ஏரோபுளொட் விமான சேவைக்கு சொந்தமான மற்றொரு விமானம் எந்த பயணிகளையும் ஏற்றாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (04) முற்பகல் 10.10 மணியளவில் வந்தடைந்ததுடன், அவ்விமானம் ரஷ்யா நோக்கி ஏரோபுளொட் விமான சேவை ஊடாக செல்ல தயாராக இருந்த  பயணிகளை அழைத்துக் கொண்டு பிற்பகல் 12.50 மணிக்கு ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளது.

இந் நிலையில் மேலும் சில ரஷ்ய பயணிகளை அழைத்து செல்ல நாளை ( 5)  மற்றொரு விமானம்   முற்பகல் 10.10 மணிக்கு கட்டுநாயக்கவை  வந்தடையவுள்ளது.