வியட்நாமின் மத்திய பகுதியை தாக்கிய டேம்ரா சூறாவளியால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து வியட்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, “வியாட்நாமின் மத்திய மற்றும் தென் பகுதியில் வீசிய டேம்ரா சூறாவளியால் மணிக்கு 90 கி.மீ வரை பலமாக காற்று வீசியது. டேம்ரா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேரைக் காணவில்லை எனவும் 40,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, டேம்ரா சூறாவளியால் வியட்நாமின் நா ட்ராங் நகரம் மிகுந்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 மக்கள் அவர்களது பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் அதிகமான புயல்களை சந்தித்து வருகிறது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பெரும் மரணங்கள் ஏற்படுகின்றன.