விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டமையே தோல்விக்கு அத்திவாரம் – அமைச்சர் தயாசிறி

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு போட்டிகள் இடம்பெறுவதற்கு முன், இரவு விருந்துபசாரங்களில் வீரர்கள் கலந்துக் கொண்டமை தொடர்பிலும் விசாரைணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், முக்கியமான போட்டிகளுக்கு முன்தினம் இரவு பூராகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதற்கான ஆதாரப் புகைப்படங்கள் தம்வசம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விருந்தபசாரமானது, அதிகாலை 4 மணிவரை இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணி நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவரான திலங்க சுமதிபாலவுடன் இடம்பெறப்போகும் கலந்துறையாடலில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் தான் எதிர்ப்பார்ப்போடு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

மேலும், தகுதியில்லாத பயிற்சியாளர் இன்மையும் தோல்விக்கு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.